சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு TNPSC., தேர்வு அறிவிப்பு
தமிழகத்தில், 245 உரிமையியல் என்ற சிவில் நீதிபதிகள் பதவிக்கு, டி.என்.பி.எஸ்.சி., எனும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு, 2018ல் 222 பேரும், 2019ல் 56 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், நான்கு ஆண்டுகளாக தேர்வு நடத்தவில்லை.
இந்நிலையில், 245 நீதிபதி பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நேற்று தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் ஆக., 19ல் முதல் நிலை தகுதி தேர்வும், அக்., 28, 29ம் தேதிகளில் பிரதான தேர்வும் நடக்க உள்ளன.
இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. வரும், 30ம் தேதி நள்ளிரவுக்குள் விண்ணப்பங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம். தங்களது கல்வி மற்றும் இதர தகுதிக்கான சான்றிதழ் ஆவணங்களை விண்ணப்பிக்கும்போதே, ஆன்லைனில் பதிவேற்ற வேண்டியது கட்டாயம்.
முதல் நிலை தகுதி தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் நடத்தப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான விடைக்கு, 0.10 மதிப்பெண் கழிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சிவில் நீதிபதிகள் தேர்வில் விண்ணப்ப பதிவு துவங்கி, பணி நியமனம் வரை, தேர்வர்கள் மற்றும் தேர்வு நடவடிக்கை தொடர்பாக, தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் வழங்கப்படாது. சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மட்டுமே, தேர்வு முறை அமையும் என, கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத, படிக்க மற்றும் பேச தெரிய வேண்டும். தமிழ் சரிவர தெரியாதவர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் பணி நியமனம் பெற்றால், பயிற்சி காலத்தில், இரண்டாம் வகுப்பு தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.