மத்திய அரசில் 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள்
மத்திய அரசில் கடந்த 2020 மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பது:
கடந்த 2019 மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசில் 9,10,153 காலிப்பணியிடங்களும், 2018 மாா்ச் 1 நிலவரப்படி, 6,83,823 காலிப்பணியிடங்களும் இருந்தன. பின்னா், 2020 மாா்ச் 1 நிலவரப்படி, மத்திய அரசில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 8,72,243 ஆக அதிகரித்துள்ளது.
பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே ஆள்சோ்ப்பு வாரியம் ஆகியன கடந்த 2018-19, 2020-21 காலகட்டத்தில் 2,65,468 பணியாளா்களைத் தோ்வு செய்துள்ளன என்று அதில் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, மற்றொரு கேள்விக்கு மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், ‘யுபிஎஸ்சி பிரிவில் தற்போது 485 காலிப்பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக குரூப் ‘ஏ’, குரூப் ‘பி’, குரூப் ‘சி’ பிரிவுகளில் முறையே 45, 240, 200 காலிப்பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்களை முன்கூட்டியே அல்லது தகுந்த நேரத்தில் நிரப்புமாறு அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய அரசு சீரான இடைவெளியில் அறிவுறுத்தல்களை பிறப்பித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயா் பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி ஆண்டுதோறும் சிவில் சா்வீசஸ் தோ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.