இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு - கடலூர் அஞ்சலையம்மாள்
வேலு நாச்சியார் - அம்புஜத்தம்மாள் - கடலூர் அஞ்சலையம்மாள்
இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு
கடலூர் அஞ்சலையம்மாள்
கடலூர் அஞ்சலையம்மாள் 1890ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே, அஞ்சலையம்மாளும் தமது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார்.
அஞ்சலையம்மாள், நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.
மேலும் அவர் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் இருந்துள்ளார். வேலூர்ச் சிறையில் இருந்தபோது, கருவுற்றநிலையில் இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்றழைத்தார். அஞ்சலையம்மாள் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கினார். இவரது பேச்சைக் கேட்பதற்காகவே பலர் திரண்டு வந்தனர். நாடெங்கும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றபொழுது, சென்னை உட்படப் பல நகரங்களுக்கும் சென்று, தனது அனல் பறக்கும் பேச்சால் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவினார். குடும்பச் சொத்துகளையும், குடியிருந்த வீட்டையும் விற்று, விடுதலைப் போராட்டத்திற்காகச் செலவு செய்தார்.
நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தம்முடைய ஒன்பது வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார். காந்தியடிகள் சிறையில் இருப்பவர்களைப் பார்க்க வந்தபோது, ஒன்பது வயதேயான அம்மாக்கண்ணு, அஞ்சலையம்மாளின் மகள் என்பதனை அறிந்து, மிகவும் மகிழ்வுற்று, அச்சிறுமியைத் தன்னுடன் வார்தாவில் உள்ள ஆசிரமத்துக்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டுப் படிக்கவும் வைத்தார்.
காந்தியடிகள் கடலூருக்கு வந்தபோது, அவரைச் சந்திப்பதற்கு அஞ்சலையம்மாளுக்கு ஆங்கில அரசு தடை விதித்தது. ஆனால், அஞ்சலையம்மாள் பர்தா வேடமணிந்து, குதிரைவண்டியில் காந்தியடிகளை ஏற்றிச்சென்றார். அதனால், காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்றழைத்தார்.